ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளர் மனு தாக்கல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று தே.மு.தி.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சுயேச்சைகள் வினோதமான முறையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். முதல் நாளில் 10 பேர் வந்ததில் 4 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 6 பேரின் மனுக்கள் முறையாக பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தே.மு.தி.க. சார்பில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்றாக சம்பத் நகர் பகுதி செயலாளர் சரவணனும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
6 பேர் வேட்புமனு தாக்கல்
மேலும் விடுதலை களம் கட்சி சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் விஜயகுமார், அண்ணா புரட்சித்தலைவர் அம்மா தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட துணை பொதுச்செயலாளர் சசிகுமார், சுயேச்சையாக ஈரோட்டை சேர்ந்த ரவி, வீரக்குமார் ஆகியோரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் உள்பட மொத்தம் இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட பலர் நாளை (வெள்ளிக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரும் அன்றைய தினம் வேட்பு மனுதாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.