ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 28 ஆயிரம் வாக்குகளை கடந்து டெபாசிட்டை தக்கவைத்தது அதிமுக
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 28 ஆயிரம் வாக்குகளை கடந்து அதிமுக டெபாசிட்டை தக்கவைத்தது.;
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் ஓட்டுச்சாவடிகளில் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும். இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பே 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்தனர்.
இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 15 சுற்றுகளாக எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை 10 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். அவர் 76,834 வாக்குகள் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 28,637 வாக்குகளை பெற்றுள்ளார். டெபாசிட் தொகையை திரும்பப் பெறுவதற்கு சுமார் 28 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில் 28 ஆயிரம் வாக்குகளை கடந்துள்ள தென்னரசு டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 4,210, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 607 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனிடையே 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.