தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம்
நாமக்கல் கோர்ட்டு வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குணசேகரன் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம் மற்றும் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமை குடும்பநல நீதிபதி பாலகுமார் தொடங்கி வைத்தார். இதில் நாமக்கல் மாவட்ட துணை இயக்குனர் (காசநோய்) வாசுதேவன் கலந்துகொண்டு, காசநோய் அறிகுறிகள், பரவும்தன்மை, காசநோயை கண்டுபிடிக்கும் வழிமுறைகள், சிகிச்சை முறைகள், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து பேசினார்.
மேலும் அவர் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட்டுள்ள அதிநவீன நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் மறைந்திருக்கும் காசநோய் தொற்றுகளை கண்டறியும் முறையினையும் எடுத்துரைத்தார். முகாமில் துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் ஜெயந்தினி, தொழுநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார். இதில் முதன்மை குற்றவியல் நீதிபதி வடிவேல், குற்றவியல் நடுவர் செல்வராஜ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள், காசநோய் துறை சார்பாக டாக்டர் ஆனந்தகுமார், மாவட்ட நலக்கல்வியாளர் ராமச்சந்திரன், மாவட்ட காசநோய் தடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கபில், செந்தில்குமார், கார்த்திகேயன் மற்றும் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி விஜய்கார்த்திக் செய்திருந்தனர்.