அரசு பள்ளி மாணவ-மாணவிகளை தொழில் முனைவோராக்கும் திட்டம்
புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளை தொழில் முைனவோராக்கும் திட்டம் குறித்து, திண்டுக்கல்லில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளின் தனித்திறன்களை வெளிப்படுத்தி தொழில் முனைவோராக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதற்கு முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் பாண்டித்துரை, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கதிரேசன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது 9 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவ-மாணவிகள் புதிய தொழில் கண்டுபிடிப்புகளை உருவாக்க ஊக்குவிக்க வேண்டும்.
மேலும் தொழில் முனைவோர் கலாசாரத்தை வளர்ப்பதோடு, தலைமை பண்பை உருவாக்க வேண்டும். மேலும் தன்னார்வம் கொண்ட மாணவர்களை சிறு, சிறு அணிகளாக பிரித்து ஆசிரியர் ஒத்துழைப்புடன் புதிய தொழில் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அதில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதன்மூலம் மாணவர்கள் சிறந்த தொழில் முனைவோராக உருவெடுக்கும் வாய்ப்பாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டது.