பழைய டிக்கெட்டை காண்பித்து உள்ளே நுழைந்தார்: சென்னை விமான நிலையத்தில் குவைத் செல்ல அனுமதிக்க கேட்டு அடம்பிடித்த வாலிபர்

தன்னை குவைத் செல்ல அனுமதிக்க கேட்டு சென்னை விமான நிலையத்தில் வாலிபர் அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய டிக்கெட்டை காண்பித்த அவரை உள்ளே அனுமதித்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரிடம் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-10-26 05:37 GMT

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் வாலிபர் ஒருவர், தன்னை குவைத் செல்ல அனுமதிக்க கோரி அடம்பிடித்து கொண்டு இருப்பதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், மத்திய தொழிற்படை போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.

உடனே விமான நிலைய அதிகாரிகள் விரைந்து சென்று விசாரித்த போது அவர், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ராமன் (வயது 30) என்பது தெரிந்தது. அவர் வெளிநாட்டு வேலைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானத்தில் குவைத் நாட்டுக்கு சென்றார்.

குவைத் விமான நிலையத்தில் அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் இவரிடம் இருந்த ஆவணங்களை பரிசோதித்த போது வேலைக்கு செல்வதற்கான முழுமையான ஆவணங்கள் இல்லை என்று கூறி ராமனை மீண்டும் சென்னைக்கே திருப்பி அனுப்பி வைத்தனா்.

சென்னை விமான நிலையத்துக்கு காலையில் வந்த ராமனை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி, கடுமையாக எச்சரித்து வெளியில் அனுப்பிவைத்தனா்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ராமன், ஆந்திராவுக்கு செல்லாமல் விமான நிலையத்திலேயே சுற்றி கொண்டு இருந்தாா். பின்னர் உள்நாட்டு முனையத்துக்குள் சென்ற ராமன், தன்னை குவைத் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக்கூறி பழைய விமான டிக்கெட்டை காட்டி உள்ளார். பின்னர் விமான நிறுவன கவுண்ட்டரில் இருந்த ஊழியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

நுழைவு வாசலில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா், பழைய டிக்கெட்டை சரியாக கவனிக்காமல் அவரை உள்ளே அனுப்பி விட்டது தெரியவந்தது.

இதையடுத்து ராமனை, பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனா். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் ராமனிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி சித்தூரில் உள்ள அவரது குடும்பத்தினரை வரவழைத்து எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

மேலும் பழைய விமான டிக்கெட்டை கவனிக்காமல் அவரை உள்ளே அனுப்பி வைத்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரிடம் உயா் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனா். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்