வயிற்று வலிக்கு அறுவை சிகிச்சை செய்த சிறிதுநேரத்தில் என்ஜினீயரிங் மாணவர் சாவு

வயிற்று வலிக்கு அறுவை சிகிச்சை ெசய்த சிறிது நேரத்தில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். தவறான சிகிச்சையால்தான் அவர் இறந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2023-02-21 18:53 GMT

ராஜபாளையம்

வயிற்று வலிக்கு அறுவை சிகிச்சை ெசய்த சிறிது நேரத்தில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். தவறான சிகிச்சையால்தான் அவர் இறந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கல்லூரி மாணவர்

தென்காசி மாவட்டம் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் காளையப்பன். இவருடைய மகன் கார்த்திக்(வயது 19). இவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் கார்த்திக் நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அவரது தாயார் அங்கு வந்து கார்த்திக்கை ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இரவில் மீண்டும் வயிற்று வலி அதிகமாகவே, அவருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அறுவை சிகிச்சை

குடல் வால்வு பாதிப்பு இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்கு பின்னர் கார்த்திக் உடல்நிலை திடீரென மோசம் அடைந்து, பேச்சுமூச்சின்றி இருந்துள்ளார். இதையடுத்து அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் கார்த்திக் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், டாக்டர்களிடம் விளக்கம் கேட்டதாகவும், அதற்கு ஆஸ்பத்திரி சார்பில் சரியாக பதில் கூறவில்லை எனவும் கூறப்படுகிறது.

தவறான சிகிச்சைதான் மாணவர் இறப்புக்கு காரணம் என பெற்றோர் தெரிவித்தனர்.

போலீசில் புகார்

மேலும் பணத்தை வாங்கிக் கொண்டு சரியாக சிகிச்சை அளிக்காததால்தான் தங்கள் மகன் இறந்துவிட்டதாகவும், எனவே சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்