மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி; மேலும் 2 பேர் படுகாயம்

கோவளத்தில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றபோது அமைந்தகரை மேம்பால தடுப்பு சுவரில் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-11-21 07:20 GMT

என்ஜினீயரிங் மாணவர்கள்

மதுரையை சேர்ந்தவர் ஆலன்ஜெர்மான்ஸ் (வயது 21). அதேபோல் வேலூரைச் சேர்ந்தவர் தருண்குமார் (21), விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (21). இவர்கள் 3 பேரும் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தனர். இதற்காக 3 பேரும் முகப்பேரில் வாடகை வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று அதிகாலை கோவளம் கடற்கரையில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக மாணவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை ஆலன்ஜெர்மான்ஸ் ஓட்டினார். மற்ற 2 பேரும் அவருக்கு பின்னால் அமர்ந்து இருந்தனர்.

ஒருவர் பலி

சென்னை அமைந்தகரை மேம்பாலத்தில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் தாறுமாறாக ஓடி, மேம்பால தடுப்பு சுவரில் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் ஆலன் ஜெர்மான்சுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினார். மற்ற இருவரும் காயங்களுடன் உதவிக்கு யாராவது வருவார்களா? என வலியால் துடித்தபடி சத்தம் போட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆலன் ஜெர்மான்ஸ் பரிதாபமாக இறந்தார்.

2 பேர் படுகாயம்

அவரது நண்பர்களான தருண்குமார், பிரவீன்குமார் இருவரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ஆலன் ஜெர்மான்ஸ் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கோவளம் கடற்கரையில் சூரிய உதயத்தை பார்க்கும் ஆர்வத்தில் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்