என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: 2 லட்சத்துக்கும் அதிகமாக குவிந்த விண்ணப்பங்கள்

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்காக 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

Update: 2024-05-23 16:59 GMT

கோப்புப்படம்

சென்னை,

அண்ணாபல்கலைக்கழகத்தின் கீழ் 450-க்கும் அதிகமான என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், பி.இ., பி.டெக்., பி.ஆர்க் ஆகிய இளநிலை பட்டப்படிப்பில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகிறார்கள். வழக்கம்போல், நடப்பாண்டு, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), கணினி அறிவியல் சார்ந்த என்ஜினீயரிங் படிப்புகளுக்கே மாணவர்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி, 2 லட்சத்து ஆயிரத்து 201 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 804 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளார்கள். இதில், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 659 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 6--ந்தேதி வரை உள்ளது. எனவே, விருப்பமுள்ள மாணவர்கள், www.tneaonline.orgஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்