தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற என்ஜினீயர் கைது; போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
நெல்லையில் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
நெல்லையில் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
தொழிலாளி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புதுக்குடி கம்பனேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). கூலி தொழிலாளி. இவருடைய மகன் மாரிச்செல்வம் (26). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாரிச்செல்வத்தை ஆஸ்பத்திரியில் காட்டுவதற்காக நேற்று முன்தினம் அவரை அழைத்துக்கொண்டு ஆறுமுகம் நெல்லைக்கு வந்தார். பின்னர் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
கொலை
அங்கு அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாரிச்செல்வம் அங்கிருந்த கத்தியை எடுத்து தந்தை ஆறுமுகத்தின் உடலில் குத்தியுள்ளார். பின்னர் அவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாரிச்செல்வத்தை மேலப்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
குழந்தையை கொன்றவர்
விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
மாரிச்செல்வம் கோவையில் என்ஜினீயரிங் படித்து விட்டு அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. பின்னர் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையால் அந்த குழந்தையை மாரிச்செல்வம் ரெயிலில் சென்றபோது வெளியே வீசி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
மகன் கைது
3 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்த மாரிச்செல்வம் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறையில் இருந்தபோது தன்னை யாரும் பார்க்க வரவில்லை என்று ஆறுமுகம் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது கோபத்தில் இருந்தாராம்.
இதனால் சிகிச்சைக்கு அழைத்து வந்த இடத்தில் மாரிச்செல்வம் தனது தந்தை ஆறுமுகத்தை கழுத்தை அறுத்துக் கொலை செய்து உள்ளார்.
இவ்வாறு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிச்செல்வத்தை கைது செய்தனர்.