எதிர்க்கட்சி தலைவர்கள் மீது மட்டுமே அமலாக்கத்துறை சோதனை

Update:2023-10-14 00:15 IST

நாகர்கோவில் வல்லன்குமாரன்விளையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று காலை திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அந்த பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் தரமான உணவு வழங்கப்படுகிறதா?, சுகாதாரமான முறையில் வினியோகம் செய்யப்படுகிறதா? என பார்வையிட்டார். மேலும் அந்த உணவையும் ருசி பார்த்தார். அதன் பிறகு அவர் மேலகிருஷ்ணன்புதூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியிலும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 375 அரசு பள்ளிகளில் 28,337 மாணவ- மாணவிகள் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகிறார்கள். காலை உணவு திட்டம் வழங்கப்படும் பள்ளிகளில் பணம் வாங்குவதாக இதுவரை எந்த புகாரும் இல்லை. அப்படி புகார் வந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கனிம வளங்கள் கடத்தப்படுவதில் எந்தவொரு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களில் கனிம வளங்களை கொண்டு செல்லக்கூடாது என்று கலெக்டர் தடை விதித்திருந்தார். இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டு மீண்டும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த விவகாரம் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த வழக்கை நாங்கள் கோர்ட்டு மூலம் சந்திப்போம்.

சபாநாயகர் சட்டப்பேரவையில் மரபுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியின் போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல பல முறை மரபு மீறிய செயல்களை செய்துள்ளனர். ஆனால் தி.மு.க. அரசு ஒருபோதும் மரபுகளை மீறியது இல்லை என்பதே வரலாறு. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு வழக்கத்திற்கும், நாட்டின் நடைமுறைகளுக்கும் மாறாக எதிர் கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீது மட்டுமே அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனையில் 0.5 சதவீதம் மட்டுமே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த புள்ளி விவரங்களே அமலாக்கத்துறையின் தவறை காட்டுகிறது. அமலாக்கத்துறையின் சோதனை என்பது தனிப்பட்ட நபரின் பெயரை களங்கப்படுத்தும் செயல்.

சாதாரணமாக கைவிடப்பட்ட திட்டங்களை எந்த அரசும் திரும்ப தொடங்கியதாக சரித்திரம் இல்லை. ஆனால் குமரியில் நான்குவழிச்சாலை பணிகள் கைவிடப்பட்டும் உடனடியாக தொடங்கச் செய்ததோடு, துரிதப்படுத்தியுள்ளோம். குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முதன்மை கல்வி அதிகாரி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வின்போது அமைச்சர், கலெக்டர், மேயர் ஆகியோர் மாணவ-மாணவிகளுடன் காலை உணவு அருந்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்