திருநின்றவூர் முதல் தாமரைப்பாக்கம் கூட்டு சாலை வரை 4 வழி சாலை அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருநின்றவூர் முதல் தாமரைப்பாக்கம் கூட்டு சாலை வரை 2 வழி சாலையை 4 வழி சாலையாக மாற்றி அமைக்க அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.;

Update:2023-05-04 13:41 IST

சென்னையிலிருந்து திருநின்றவூர் வழியாக பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு செல்ல இருவழிச் சாலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையும், வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் ஆகியவை இந்த பகுதிகளில் அதிகளவில் உள்ளது.

இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகள் ஏற்படுகிறது.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சாலையை அகலப்படுத்தி 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அமைப்பதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ரூ.111 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருநின்றவூரில் இருந்து தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை வரை 11 கி.மீ. தூரத்திற்கு 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இந்த நிலையில் திருநின்றவூர் அடுத்த நத்தமேடு பகுதியில் 2 வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை, மின்வாரியத் துறை அலுவலர்கள் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடைபெற்றது. சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றிவிட்டு நெடுஞ்சாலை விரிவாக்கும் பணிகள் அடுத்த வருடம் செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்