சிறப்பு முகாம்கள் மூலம் 2,172 பேருக்கு வேலை வாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 2,172 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.;

Update:2023-10-27 00:45 IST


தமிழ்நாட்டில் வேலைதேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் நிறுவனங்களையும், இணைய வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளம் தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு குறித்த தகவல்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இளைஞர்கள் இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களுக்கேற்ற பணிவாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார் துறை நிறுவனங்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் வழங்குவதற்கும், இந்த இணையதளம் வழிவகை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசால் வேலை அளிப்போர் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இந்த சேவை கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு துறை அதிகாரி கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 7.12.2021 அன்று கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் 33 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 265 நபர்களை தேர்வு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்தின் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

அதேபோல், 12.5.2022 அன்று ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைப்பெற்ற முகாமில் 165 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 5,912 வேலைநாடுநர்கள் பங்கேற்றதில், 1,279 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் பெற்றுள்ளனர்.

இதை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதன்படி குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் 25.7.2023 அன்று நடைபெற்ற முகாமில், 125 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 628 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,172 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இதே போல் வருகிற 4-ந் தேதி குன்னூரில் மீண்டும் வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்