கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரும்பு கேட்டை மூட முடியாதபடி கான்கிரீட் போட்ட ஊழியர்கள்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இரும்பு கேட்டை மூட முடியாதபடி ஊழியர்கள் கான்கிரீட் போட்டனர்.

Update: 2022-08-22 16:51 GMT

வேலூர் மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ஜீப்பை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டது. இதேபோல் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது சாலையோரம் இருந்த அடிபம்பு ஒன்று அகற்றப்படாமல் அதன் மீது கான்கிரீட் கலவை போடப்பட்டது. இந்த சம்பவங்கள் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கடலூரில் இரும்பு கேட்டை மூட முடியாதப்படி கான்கிரீட் போடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சாலை மட்டத்தில் இருந்து உயரம்

கடலூர் மாநகரில் மழை வெள்ள காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் சுமார் 45 கி.மீட்டர் தூரத்திற்கு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. மந்தகதியில் நடக்கும் இந்த பணி, இன்னும் முடிந்தபாடில்லை. 5 ஆண்டுகளில் சுமார் 30 கி.மீட்டர் தூரத்திற்கு தான் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் பல இடங்களில் தரமின்றி அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலங்கள், சாலை மட்டத்தில் இருந்து சுமார் 2 அடி உயரமாக கட்டப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகள் தற்போது தாழ்வாக காணப்படுகிறது.

கண்டுகொள்ளாத ஊழியர்கள்

இந்த நிலையில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில் வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற எவ்வித வசதிகளும் செய்யாமல், வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வடிகாலின் உயரம் சாலை மட்டத்தை விட அதிகமாக இருப்பதால், வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குள் வாகனங்கள் சென்று வரும் வகையில் இருபுறமும் கான்கிரீட் போடப்பட்டது. ஆனால் அங்குள்ள இரும்பு கேட்டை திறந்து மூட முடியாதபடி, இரும்பு கேட்டுடன் சேர்த்து கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் புகார் அளித்தும், வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதேபோல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நுழைவு வாயில் இரும்பு கேட்டையும் திறக்க முடியாதபடி, கதவுடன் சேர்த்து கான்கிரீட் போடப்பட்டுள்ளது. இதனால் அலட்சியமாக செயல்படும், வடிகால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்