ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியர்கள் பெங்களூருக்கு நடைபயணம்

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனமான ‘ஸ்விகி’யில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

Update: 2022-09-23 21:40 GMT

பூந்தமல்லி,

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனமான 'ஸ்விகி'யில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக இந்த நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் இருந்து பெங்களூருவில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நோக்கி நடைபயணமாக புறப்பட்டு சென்றனர்.

இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

எங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை வேலை செய்யும்போது குறிப்பிட்ட தொகை சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. தற் போது இந்த பழைய நடைமுறையை மாற்றி பகுதி நேரமாக பார்ப்பவர்களுக்கும், முழுநேரமாக பார்ப்பவர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு இத்தனை உணவு டெலிவரி செய்தால் குறிப்பிட்ட தொகை சம்பளமாக தருவதாகவும் கூறுகின்றனர். இது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. இதனால் எங்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

எனவே பழைய நடைமுறைபடி சம்பளம் வழங்கும்படி கடந்த திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். நுங்கம்பாக்கத்தில் உள்ள எங்களது நிறுவன அலுவலகத்தில் எங்கள் கோரிக்கையை தெரிவித்தும் ஏற்கவில்லை. எனவே பெங்களூருவில் உள்ள எங்கள் நிறுவன தலைமை அலுவலகத்துக்கு சென்று கோரிக்கையை வலியுறுத்த நடைபயணமாக செல்கிறோம். அவர்களும் ஏற்காவிட்டால் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேற போகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்