மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி

வேடசந்தூர் அருகே, உயர் அழுத்த மின்பாதையில் கோளாறை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-09-24 19:34 GMT

மின்வாரிய ஊழியர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் வி.புதுக்கோட்டை ஊராட்சி மினுக்கம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மகன் கருப்புசாமி (வயது 27). இவர், சேனன்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஊழியராக (கேங்மேன்) பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

சேனன்கோட்டையில் இருந்து முருநெல்லிக்கோட்டைக்கு உயர் அழுத்த மின்பாதை செல்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின்போது மின்னல் தாக்கியதில், அந்த உயர் மின்அழுத்த பாதையில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மின்சாரம் பாய்ந்து பலி

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் மின்வாரிய மேற்பார்வையாளர் சிவகுமார் தலைமையில் ஊழியர்கள் கருப்புசாமி, பாஸ்கரன், பெருமாள் ஆகிய 4 பேரும் உயர் அழுத்த மின்சார பாதையில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய புறப்பட்டனர்.

இதற்காக ஜி.நடுப்பட்டி ஊராட்சி பூலாங்குளம் கிராமத்துக்கு சென்றனர். அங்கு உள்ள ஒரு மின்கம்பத்தில் கருப்புசாமி ேமலே ஏறினார். மின்வயரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கருப்புசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். கருப்புசாமியின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இந்த காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.

இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்கோளாறை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்