உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்

உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பதவி உயர்வு பெற்ற பட்டதாரி - தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-05-21 19:18 GMT

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் ஒரு ஓட்டலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜேசுதாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் செல்வநாயகம் வரவேற்றார். மாநில தலைவர் உதயசூரியன், பொதுச் செயலாளர் பெனின் தேவகுமார், பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிறுவனர் ராமமூர்த்தி, மாநில சிறப்பு தலைவர் அண்ணாமலை ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை வழங்க வேண்டும். 2016-ம் ஆண்டுக்கு பிறகு முதுகலை ஆசிரியர் பணியிலிருந்து உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக விதிகளுக்கு புறம்பாக பணி மாறுதல் பெற்ற அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நியமிக்க வேண்டும். பதவி உயர்வு கலந்தாய்வு, இடமாறுதல் கலந்தாய்வை இந்த மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் ராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்