பயிர்களை சேதப்படுத்திய யானைகள்
தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைகள் நெல், முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைகள் நெல், முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த யானைகளை வனத்துறையினர் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டை- அஞ்செட்டி சாலையை கடந்து சென்ற 30-க்கும் மேற்பட்ட யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றன இந்த யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
பயிர்கள் சேதம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தல்சூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள எஸ்.குருபட்டியை சேர்ந்த பச்சையப்பன் என்பவரது விவசாய நிலத்தில் புகுந்தன. இந்த யானைகள் அங்கிருந்த முட்டைகோஸ், நெல், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.
இதனிடையே நேற்று காலை நிலத்திற்கு சென்ற விவசாயிகள் பயிர்கள் சேதமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். அப்போது யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் விவசாய நிலங்களில் புகாமல் தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.