டி.என்.பாளையம் அருகே குட்டையில் இறந்து கிடந்த யானை

டி.என்.பாளையம் அருகே குட்டையில் யானை இறந்து கிடந்தது.

Update: 2022-08-18 21:29 GMT

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே குட்டையில் யானை இறந்து கிடந்தது.

தோட்டத்துக்குள் புகுந்த யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டி.என்.பாளையம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டி.என்.பாளையம் வனச்சரகம் கொங்கர்பாளையம் காவல் சுற்றுக்கு உள்பட்ட வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த யானை வன எல்லையையொட்டி உள்ள ஒரு நிலத்துக்குள் புகுந்தது.

குட்டையில் இறந்து கிடந்தது

அதைத்தொடர்ந்து அங்கிருந்த குட்டைக்கு சென்று யானை தண்ணீர் குடித்தது. இந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அந்த யானை உயிரிழந்தது. இதனை அந்த வழியாக ரோந்து சென்ற டி.என்.பாளையம் வனத்துறையினர் பார்த்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குனர் கிருபா சங்கர், டி.என்.பாளையம் வனசரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக அங்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்த்தனர்.

உடற்கூராய்வு

தகவல் கிடைத்து நேற்று காலை கால்நடை டாக்டர் சதாசிவமும் அங்கு சென்றார். பின்னர் இறந்த யானையின் உடலை கூராய்வு செய்தனர். பின்னர் அவர் கூறும்போது, 'இறந்தது ஆண் யானை. அந்த யானைக்கு 12 வயது இருக்கும்' என்றார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'யானை கடந்த சில நாட்களாக குடற்புழு நோயால் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு் வந்துள்ளது. இதனால் ' குட்டைக்கு வந்து தண்ணீர் குடித்துள்ளது. அதேபோல் நேற்று முன்தினம் வந்த யானை குட்டையில் விழுந்து இறந்துள்ளது' என்றனர். உடற்கூராய்வுக்கு பிறகு குழி தோண்டி யானையின் உடல் அதே பகுதியில் புதைக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்