பரமக்குடி அருகே உறியடி திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் பலி

பரமக்குடி அருகே உறியடி திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். படுகாயம் அடைந்த அவனது அண்ணனுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-09-07 19:31 GMT

பரமக்குடி,

பரமக்குடி அருகே உறியடி திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். படுகாயம் அடைந்த அவனது அண்ணனுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மின்சாரம் தாக்கி பலி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாயக்குடி கிராமத்தில் நேற்று மாலை கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. அதை முன்னிட்டு உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. உறி அடித்த பின்பு அந்த பானையின் கயிற்றை பிடித்து இழுத்து அங்கிருந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அதன் அருகில் சென்ற மின்சார கம்பி மீது அந்த கயிறு உரசியதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் பாய்ந்து 4 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அதில் பரமக்குடி மணிநகர் பகுதிைய சேர்ந்த முருகன் மகன் கபினேஷ் (வயது 7) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானான். இவன் சோமநாதபுரத்தில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். அவனது அண்ணன் கோகுல ராகுல்(10) படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான்.

சோகம்

முருகன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊரான மேலாயக்குடியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு சிறுவர்கள் தனது தாயார் அனுஷியா தேவியுடன் சென்றுள்ளனர். அப்போது தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்