பெரம்பலூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் (சி.ஐ.டி.யூ.) நேற்று முதல்-அமைச்சரிடம் கலெக்டர் மூலமாக மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மாநில செயலாளர் அகஸ்டின் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்.
காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுத்துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துவோம் என்ற தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் மூலமாக முதல்-அமைச்சரிடம் அளிக்கும் வகையில் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.