மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் சாவு
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 40).
வாலாஜாபாத்தில் உள்ள துணை மின் நிலைய மின்சார வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட காஞ்சீபுரம்- வாலாஜாபாத் சாலையில் டாஸ்மாக் கடை அருகே உள்ள மின்கம்பத்தை லாரி ஒன்று மோதி விட்டு சென்றதால் மின்சாரம் தடைபட்டது.
மின்தடை குறித்து தகவல் அறிந்த மோகன்ராஜ் மற்றும் சக மின்வாரிய ஊழியர்கள் மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
லாரி மோதியதால் பழுதடைந்த மின்சார கம்பத்தை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது மின்மாற்றியில் மின்தடம் மாற்றும் பணியை மோகன்ராஜ் மேற்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் மோகன்ராஜ் மின்மாற்றியிலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சீபுரம் தீயணைப்புத்துறையினர் மற்றும் வாலாஜாபாத் போலீசார் மின்மாற்றியில் சிக்கி உயிரிழந்த மோகன்ராஜ் உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்வாரிய ஊழியர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மோகன்ராஜ்க்கு காஞ்சனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். பணியின் போதே மின்சாரம் தாக்கி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வாலாஜாபாத் மின் வாரிய ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.