தமிழகத்தில் உச்சத்தை தொட்ட மின்சார பயன்பாடு... ஒரே நாளில் 20 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது

கடந்த மாதத்தில் இருந்த மின்சாரத்தின் தேவையுடன் ஒப்பிடும்போது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகப்படியான மின்சார தேவை இருக்கிறது.

Update: 2024-04-11 00:05 GMT

சென்னை,

பொருளாதார வளர்ச்சியால் உந்தப்பட்டு, இந்தியாவின் மின்சாரத் தேவை ஆண்டுக்கு ஆண்டு அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. இதனை ஈடுகட்டுவதற்காக மின்சார வாரியமும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, ஏசி பயன்பாடு அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சராசரி மின்சாரத்தின் தேவை 30 கோடி யூனிட்டாக இருந்த நிலையில், தற்போது தினசரி மின்சாரத்தின் தேவை 40 கோடி யூனிட்டை தாண்டி பதிவாகி வருகிறது.

மின்சாரத்தின் தேவை அதிகரித்துவரும் நிலையில், தமிழ்நாட்டின் மின்சார தேவை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இருந்த மின்சாரத்தின் தேவையுடன் ஒப்பிடும்போது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகப்படியான மின்சார தேவை இருக்கிறது.

அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே மின்சாரத்தின் தேவை படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்துள்ளது. குறிப்பாக கடந்த 1-ந்தேதி 19,409 மெகாவாட்டாக இருந்த மின்சாரத்தின் தேவை, தற்போது, 10 நாட்களுக்கு பிறகு இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 125 மெகாவாட்டாக உயர்ந்து உள்ளது.

தேவையான மின்சாரம் அனல மின்நிலையங்கள் உள்ளிட்ட மின்சார உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது. அடுத்த மாதத்தில் காற்றாலை சீசன் தொடங்கிவிட்டால் அதன் மூலம் சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது வெப்பத்தின் தாக்கத்தால் சோலார் மூலம் சராசரியாக 5 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் கிடைத்து வருகிறது. தொடர்ந்து மின்சாரத்தின் தேவையை மின்சார வாரியம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்து வினியோகம் செய்துவருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்