சிறுமியை கேலி- கிண்டல் செய்த எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை

திருச்செந்தூரில் சிறுமியை கேலி-கிண்டல் செய்த எலக்ட்ரீசியன் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுமியின் தந்தையான தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-11 13:58 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் சிறுமியை கேலி-கிண்டல் செய்த எலக்ட்ரீசியன் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுமியின் தந்தையான தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

எலக்ட்ரீசியன்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதரக்கோன்விளையைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மணிகண்டன் (வயது 20). இவருடைய அக்காள் திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவில் வசித்து வருகிறார். இவருடைய மகளுக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

இதற்காக மணிகண்டன் தனது நண்பரான நெல்லை மேலப்பாளையம் வசந்தபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன் (32) என்பவரை அழைத்தார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் திருச்செந்தூருக்கு சென்றார்.

சிறுமியிடம் கிண்டல்

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை கண்ணன் கேலி-கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தந்தையான தொழிலாளி ராஜியிடம் (40) தெரிவித்தார்.

இதுதொடர்பாக ராஜின் மனைவி, கண்ணனிடம் கேட்டார். அப்போது, அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

வெட்டிக்கொலை

நேற்று முன்தினம் இரவில் வீரராகவபுரம் குதிரை வண்டி தெருவில் கண்ணன், மணிகண்டன் உள்ளிட்ட நண்பர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ராஜ், அவரது மைத்துனர் ராஜ்வடிவேல் ஆகியோர் அங்கு சென்றனர். அவர்களுக்கும், கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் கண்ணனின் கழுத்து, உடல் பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்து உடனடியாக திருச்செந்தூர் கோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த கொடூரக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜை கைது செய்தனர். தப்பி ஓடிய ராஜ்வடிவேலுவை வலைவீசி தேடிவருகிறார்கள்.

திருச்செந்தூரில் சிறுமியை கேலி-கிண்டல் செய்த எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்