மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
திருக்காடுதுறை அருகே மைக் செட் கட்டியபோது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
எலக்ட்ரீசியன்
கரூர் வெங்கமேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் நவீன் குமார் (வயது 27). இவர் திருக்காடுதுறை அருகே கரைப்பாளையம் பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்து எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மேலும், மைக் செட் வைக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் தைப்பூசத்தையொட்டி புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் காவடி எடுத்துச்சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இதற்காக நேற்று காலை 8 மணியளவில் அங்கு புதிதாக பந்தல் போடப்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பகுதியில் பக்தி பாடல்களை இசைப்பதற்காக நவீன் குமார் கரைப்பாளையம் விநாயகர் கோவில் கோபுரத்தில் ஏறி அருகே இருந்த மரத்தில் மைக்செட்டை கட்டி விட்டு கோபுரத்தின் மீது நின்று கொண்டு கையில் வைத்திருந்த ஒயரை வீசி உள்ளார்.
மின்சாரம் பாய்ந்து பலி
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் ஒயர் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து நவீன் குமார் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நவீன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.