மதுபோதை தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை - போலீசுக்கு பயந்து ஏரியில் குதித்து நண்பர் தற்கொலை
காஞ்சீபுரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரீசியனை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த நண்பர், போலீசுக்கு பயந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.;
காஞ்சீபுரம் நாராயணபாளையம் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 40). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி, சில மாதங்களிலேயே மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பிள்ளையார்பாளையம் பகுதியில் வசிக்கும் தன்னுடைய நண்பரான மற்றொரு எலக்ட்ரீசியன் பெருமாளுடன் (43) சேர்ந்து இந்திரா நகர் புதிய ரெயில் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து மது அருந்தினார்.
அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெருமாள், அருகில் கிடந்த இரும்பு கம்பி மற்றும் கற்களால் பிரபாகரனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் பெருமாள் தப்பிச்சென்று விட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் கொலையான பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெருமாளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் அங்குள்ள பொன்னேரி கரை ஏரியில் பெருமாள் பிணமாக கிடப்பது தெரிந்தது. போலீசார் பெருமாள் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் பிரபாகரனை அடித்துக்கொலை செய்த பெருமாள், போலீசார் தன்னை பிடித்து கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் பொன்னேரி கரை ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
குடிபோதையில் நண்பரை கொன்றுவிட்டு, தானும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.