பலத்த மழையால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

மதுரை பகுதியில் பெய்த பலத்த மழையால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.;

Update:2022-07-31 01:12 IST

மதுரை பகுதியில் பெய்த பலத்த மழையால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.

பலத்த மழை

மதுரையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் நகர்முழுவதும் மழை வெள்ளத்தால் தத்தளித்தது. மகால் பகுதியில் நேற்று பெய்த மழையால் மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திடீர்நகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுபோல், அப்பன்திருப்பதி பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனை தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர்.

மேலும் பலத்த மழைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. அதில் சுவாமி சன்னதி கொடி மரம் பகுதி மற்றும் ஆடி வீதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. இதனால் நேற்றுஇரவு ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் மீனாட்சி அம்மன் வீதி உலா கோவிலுக்குள் நடந்தது. மேலும் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். இது தவிர கோவிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் மாசி வீதிகளில் தண்ணீர் அதிகளவு தேங்கி இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி, எழுமலை, சேடபட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் பருத்தி, குதிரைவாலி, கம்பு, சோளம் மற்றும் பயிர் வகைகளை சாகுபடி செய்வது வழக்கம். இதற்காக மழையை எதிர்பார்த்து விவசாயிகள் தங்கள் நிலங்களை உழவு செய்து விதைப்புக்கு தயார் நிலையில் வைத்திருந்தனர். கடந்த 2 நாட்களாகவே குறைந்த அளவு மழை தான் பெய்தது. ஆனால் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள், ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மின்கம்பங்கள் சாய்ந்தன

மேலும் அழகர்கோவில், சோலைமலை முருகன் கோவில் மற்றும் அழகர் மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை ராக்காயி அம்மன் கோவில் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த இடிமின்னலுடன் பெய்தது. மேலும் அலங்காநல்லூர், பாலமேடு பகுதியிலும் மழை பெய்தது. தவிர மதுரை வடக்கு தாலுகா காஞ்சரம்பேட்டை வட்டாரத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதில் மின் கம்பங்கள் வயருடன் சாய்ந்தன. பல மரங்கள் முறிந்து விழுந்தன. மதுரை-நத்தம் சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் தடைபட்டது.

மதுரையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மதுரையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அதனை அகற்றும் பணியில் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்