தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்

காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-07-06 17:21 GMT

கிணத்துக்கடவு

காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சி பதவிகள்

கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெம்பர் 10.முத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி மற்றும் குருநல்லிபாளையம், நல்லட்டிபாளையம், சொக்கனூர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் நெம்பர் 10.முத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஜெ.மஞ்சுசெளமியா (வயது 39) பூட்டு,சாவி சின்னத்திலும், நா.சதீஷ்குமார் (37) ஆட்டோ ரிக் ஷா சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

நல்லட்டிப்பாளையம் 4-வது வார்டு, சொக்கனூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால் குருநல்லிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குச்சாவடிகள் அமைப்பு

இதையொட்டி 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 2 நாட்களே உள்ளதால் தேர்தலுக்கு தேவையான பொருட்களான வாக்குபெட்டி, மை, பதிவேடுகள் உள்ளிட்ட 72 பொருட்கள் தயார் நிலையில் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. முன்னேற்பாடு பணிகளை கிணத்துக்கடவு தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி நேரில் பார்வையிட்டார்.

நெம்பர்.10.முத்தூர் ஊராட்சி பகுதியிலும், குருநல்லிபாளையத்திலும் வாக்காளர்கள் தங்களது சின்னங்களுக்கு வீடு, வீடாக சென்று வாக்குகளை தீவிரமாக சேகரித்து வருகின்றனர். இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. தொடர்ந்து நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்கள் வாக்களிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை

வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்கு உள்ள அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. 12-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்