கயத்தாறு அருகே முதியவர் வெட்டிக் கொலை - மருமகன் வெறிச் செயல்...!
கயத்தாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக முதியவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சிவஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் மந்திரம்(65). இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதி மகள் ஜெயாவுக்கும், அதே பகுதி சேர்ந்த தர்மர் மகன் சந்தனகுமாருக்கும்(36) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
மது அருந்தும் பழக்கமுடைய சந்தனகுமாருக்கும், அவரது மனைவி ஜெயாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயா கோபித்து கொண்டு தற்போது பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் மந்திரம்(65) இன்று மாலை அதே பகுதியில் பால் பண்ணைக்கு பால் ஊற்ற நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை சந்தனகுமார் வழிமறித்து தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றிய நிலையில் சந்தனகுமார் மந்திரத்தை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மந்திரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு காவல் நிலைய போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவரை கொலை செய்த அவரது மருமகன் சந்தனகுமாரை தேடி வருகின்றனர்.