எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு: மீதம் உள்ள பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் - தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி இந்த மாத இறுதிக்குள் முழுவதுமாக தொடங்கப்படும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-10-11 06:45 GMT

பழமை வாய்ந்த சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன், விமான நிலையம் போன்ற வசதிகளுடன் மறுசீரமைப்பு செய்ய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, ரூ.734 கோடியே 91 லட்சம் செலவில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ரெயில் நிலையத்தை ஒட்டியவாறு புதிய கட்டுமான பணிகளுக்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் சீரான வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், மொத்தம் உள்ள 13 துணை பணிகளில் 4 பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பன்னடுக்கு கார் பார்கிங், புதிய பார்சல் அலுவலகம் உள்ளிட்ட 13 துணை திட்டப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதில் 4 துணை திட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீதமுள்ள 9 துணை திட்ட பணிகளும் இந்த மாத இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பன்னடுக்கு வாகன நிறுத்தம், பார்சல் அலுவலகம் கட்டுமானப் பணிகள் முழுவேகத்தில் நடைபெற்று வருகின்றன.

எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் சுரங்கபாதைகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்வாரியம், சென்னை மாநகராட்சி, பெருநகர வளர்ச்சி குழுமம், மாநகர போக்குவரத்துக் கழகம், நெடுஞ்சாலைத் துறை, பசுமைக் குழு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற துறைகள் ரெயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

இதன் மூலம் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை எழும்பூர் ரெயில் நிலையம் மூலம் பெறலாம். தமிழ்நாட்டின் முதல் உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையம் சென்னை எழும்பூரில் அமைக்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ரெயில் நிலையத்தின் பார்சல் மற்றும் வருகை பயணிகளுக்கான நடைமேம்பாலம் கட்டுமான பணி ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும். இதற்கான வடிவமைப்புகள் நிறைந்துள்ளன. எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் உள்ளது போன்ற வசதிகளை வழங்குவதே தெற்கு ரெயில்வேயின் நோக்கமாகும். இதன் மூலம், சர்வதேச தரத்திற்கு பயண அனுபவத்தை பெற முடியும்.

இவ்வாறு கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்