நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 555 காசுகளாக உயர்வுபுதிய உச்சத்தை தொட்டதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

Update: 2023-01-01 18:45 GMT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 555 காசுகளாக உயர்ந்தது. புதிய உச்சத்தை தொட்டதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முட்டை விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 5 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 4½ கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கான விலையை வாரத்தில் 3 நாட்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. இந்த முட்டை கொள்முதல் விலையானது தட்பவெட்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படும்.

அந்த வகையில் நேற்று முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்தது. இதனால் முட்டை கொள்முதல் விலை 555 காசுகளாக உயர்ந்தது. கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்தது.

புதிய உச்சத்தை தொட்டது

தற்போது முட்டை கொள்முதல் விலை 555 காசுகள் என்ற புதிய உச்சத்தை தொட்டு இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த சில நாட்களாக 550 காசுகளாக நீடித்து வந்த முட்டை கொள்முதல் விலை தற்போது வரலாறு காணாத விலையை தொட்டுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜன் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலேசியாவுக்கு மட்டும் ஒரு மாதத்தில் சுமார் 4 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக மாதம் ஒன்றுக்கு சுமார் 10 கோடி முட்டைகள் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க தமிழகம், கேரளாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி முட்டை விற்பனை சூடுபிடித்தது. அதே நேரத்தில் வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கி இருப்பதால் அங்கும் முட்டையின் தேவை அதிகரித்து, அதிகளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பொதுமக்களிடம் நுகர்வு அதிகரிப்பு, தீவன விலை உயர்வு போன்றவையே முட்டை விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்