ராயபுரத்தில் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை- நலத்திட்ட உதவிகள்
ராயபுரத்தில் தி.மு.க. மூத்த நிர்வாகிளுக்கு பொற்கிழி, பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.;
நலத்திட்ட உதவிகள்
சென்னை ராயபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளைய அருணா தலைமை தாங்கினார். வர்த்தக அணி துணை செயலாளர் பி.டி.பாண்டி செல்வம் வரவேற்றார். விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழியும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிங்க சிலை மற்றும் வாள் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
ரூ.5½ கோடி
கலைஞர் அறக்கட்டளை சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் கட்சி மூத்த நிர்வாகிளுக்கு மருத்துவச் செலவு, அவர்களது குடும்பத்தினரின் கல்விச் செலவு என இதுவரை ரூ.5½ கோடி வழங்கப்பட்டுள்ளது. இளைஞரணி சார்பிலும் உதவி தேவைபடுவோருக்கு கடந்த 3 மாதங்களில் ரூ.50 லட்சம் வரை உதவி உள்ளோம். கடந்த 1½ ஆண்டுகளில் சுமார் 30 மாவட்ட தி.மு.க. சார்பில் என்னுடைய கைகளால் மட்டும் ரூ.30 கோடி வரை மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கி உள்ளேன். ஒரு பேரன் தன்னுடைய தாத்தா - பாட்டிகளுக்கு செய்யும் கடமையாக இதை செய்கிறேன். நீங்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை நேரில் பார்த்து இருப்பீர்கள். அவர்களுடன் போராடி இருப்பீர்கள், சிறை சென்று இருப்பீர்கள். எனவே அவர்களின் மறு உருவமாகதான் மூத்த நிர்வாகிகள் அனைவரையும் நான் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்
கூட்டத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், கே.பி.சங்கர், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, நிர்வாகிகள் கருணாநிதி, ந.மனோகரன், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பகுதி செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.