கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்: பிரதமரிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

Update: 2022-11-11 23:20 GMT

சென்னை,

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நேற்று 36-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்கான அறிவாலயமாக காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் திகழ்கிறது. கல்வியின் வழியாக மனிதரை சமூகத்துக்கு பயனுள்ளவராக மாற்றுவதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. "இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் உயர நாடு உயரும்" என்ற காந்திய கொள்கையின் அடிப்படையில் அவரது நல்லாசியோடு அவர்களுடைய சீடர்களான டாக்டர் ஜி.ராமச்சந்திரன், அவரது துணைவியார் டாக்டர் எஸ்.சவுந்தரம் ஆகியோரால் தொடங்கப்பட்ட கிராமிய பயிற்சி நிறுவனம், இன்று நிகர்நிலை பல்கலைக்கழகமாக வளர்ந்து, சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களும், வெளிநாடுகளைச் சார்ந்த மாணவர்களும், இங்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளைப் பயின்று வருகின்றனர். இதற்கு ஏதுவாக, கல்வி கொடையாக 207 ஏக்கர் நிலத்தை இப்பல்கலைக்கழத்திற்காக வழங்கிய சின்னாளப்பட்டியைச் சேர்ந்த புரவலர்களை இந்நேரத்தில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

உயர்கல்வியில் சிறந்த மாநிலம்

தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவை கலை, அறிவியல், பொறியியல், கல்வியியல், விளையாட்டு, கால்நடை, மருத்துவம், மீன்வளம், தமிழ்வளர்ச்சி, சட்டம், வேளாண்மை மற்றும் இசை ஆகிய துறைகளின் கீழ் திறம்பட செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு, இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்கிறது. இதை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கல்வி திட்டங்களைத் தீட்டி வருகிறது. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க புதுமைப்பெண் என்ற உயர்கல்வி உறுதி திட்டம்; அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு; ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில நிதியுதவி திட்டம் போன்றவற்றின் மூலமாக அனைவரும் உயர்கல்வி பயில தமிழ்நாடு அரசு ஆவன செய்து வருகிறது.

நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு என்பது போன்ற பல்வேறு கல்வி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இவை தமிழக எல்லையைத் தாண்டி அனைத்து மாநில அரசுகளும் உன்னிப்பாக கவனிக்கும் திட்டங்களாக அமைந்துள்ளன.

மீண்டும் மாநில பட்டியல்

எந்தவொரு சூழ்நிலையிலும் யாராலும் ஒருவரிடம் இருந்து பறிக்க முடியாத சொத்து கல்வியாகும். கல்விச் சொத்தை மக்களுக்கு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. எனவே இதுபோன்ற மாநில அரசின் முயற்சிகளை ஆதரித்து ஊக்கமளிக்கும் வகையில், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்ட போதும், நடைமுறைக்கு வந்தபோதும் மாநில பட்டியலில்தான் கல்வி இருந்தது. அவசர நிலை ஆட்சி நடந்த காலகட்டத்தில்தான் பொதுப்பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டது. எனவே கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றும்படி மத்திய அரசை குறிப்பாக, பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.

பெயர் சொல்லும் தகுதி

சமூகத்திற்கு சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்ற காந்தியடிகளின் கூற்றிற்கு ஏற்ப முற்போக்கு சிந்தனையுடன் அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகத்தை கட்டமைக்க இளைஞர்களாகிய உங்களை வேண்டுகிறேன். உண்மை, ஒழுக்கம், வாக்கு தவறாமை, அனைவருக்கும் சமமான நீதி, மதநல்லிணக்கம், வகுப்பு ஒற்றுமை, சிறுபான்மையினர் நலன், தனிநபருக்கான மதிப்பு, ஏழைகள் நலன், அகிம்சை, தீண்டாமை விலக்கு, அதிகாரக் குவியலை எதிர்த்தல், ஏகபோகத்துக்கு எதிர்ப்பு, சுதந்திரமான சிந்தனை, அனைவர் கருத்துக்கும் மதிப்பளித்தல், கிராம முன்னேற்றம் ஆகியவைதான் காந்தியத்தின் அடிப்படைகள். இவை அனைத்தும்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்கள். இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலமாக காந்தியின் பெயரைச் சொல்ல நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்வோம்.

இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது பெருமகிழ்ச்சிக்குரியதாகும். காந்திய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களாக, பரப்புரை செய்பவர்களாக நடந்து காட்டுபவர்களாக இளைய சமுதாயம், மாணவர்கள் இயங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்