படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-23 19:07 GMT

கடன் வழங்கும் திட்டம்

தமிழகத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் (யூ.ஒய்.இ.ஜி.பி.) நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசாணையின் படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்தில் 25 சதவீத அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் என்ற அடிப்படையில் திட்டம் செயல்பட்டு வந்தது.

விண்ணப்பிக்கலாம்

இந்த நிதியாண்டில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 வயதில் இருந்து 45 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 45 வயதில் இருந்து 55 வயது வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் வியாபார தொழில் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப நகலை பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்திலும் ஒப்படைக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு செல்போன் எண்கள் 8925533977, 8925533978 மற்றும் 04328 225580 ஆகிய தொலைபேசி எண்ணில் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் அணுகி பயன்பெறலாம்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்