முறைகேடுகளை வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியர் தற்காலிக பணி நீக்கம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தவறை சுட்டிக்காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கு என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;

Update: 2024-09-05 09:11 GMT

கோப்புப்படம் 

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த நிர்வாக சீர்கேட்டையும் முறைகேடுகளையும் வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியரையே தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது கடும் அராஜகத்தின் உச்சம். தி.மு.க. அரசின் 40 மாத கால ஆட்சியில் ஆவின் நிறுவனம் படுபாதாளத்திற்கு சென்றுள்ளது. மிக அத்தியாவசியப் பொருளான பால் வழங்கும் பொது நிறுவனமான ஆவினில் கலப்படம் என்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அதனை ஆவின் ஊழியர் சமூக அக்கறையுடன் வெளிக்கொணர்ந்துள்ள நிலையில், அவர் கூறிய புகாரில் உண்மை உள்ளதா என்று ஆராய்ந்து, தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில், தவறை சுட்டிக்காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அப்பட்டமான சர்வாதிகாரப் போக்கு. இத்தகைய போக்குடைய அரசுகள் இருந்த தடம் தெரியாமல் வீழ்ந்ததற்கு வரலாறு நெடுக சான்றுகள் இருப்பதை இந்த தி.மு.க. அரசு நினைவிற்கொள்ள வேண்டும்.

போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கைக் காக்கவும் "சர்வாதிகாரியாக மாறுவேன்" என்று வெறும் கையால் வாள் சுழற்றிய தி.மு.க. முதல்-அமைச்சர், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தனது ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களை ஒடுக்குவதில் மட்டும் சர்வாதிகாரியாக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக தவறை சுட்டிக் காட்டிய நிறுவன ஊழியரை மீண்டும் பணி அமர்த்தவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்