தொடர் மழை எதிரொலி: ஏற்காட்டில் காட்டாற்று வெள்ளம்; 7 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு சேலம் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு

ஏற்காட்டில் தொடர் மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 7 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சேலம் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2022-09-01 20:48 GMT

ஏற்காடு,

பலத்த மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சேலம், ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், தம்மம்பட்டி, சங்ககிரி என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் கடந்த 3 நாட்களாக பகல், இரவு என தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.

ஏற்காட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் கேழையூர், பெலாக்காடு, அரங்கம், தென்திட்டு உள்பட 7 கிராமங்களில் உள்ள சாலைகள் காட்டாற்று வெள்ளத்தால் சேதம் அடைந்தன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இயல்பு வாழ்க்கை

தொடர் மழை, சாலை துண்டிப்பால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏற்காட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டூர் செல்லும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண் சரிவில் உருண்டு விழுந்த பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஊராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மாரமங்கலம் பகுதியில் வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்ததால் சுமார் 10 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. ஏற்காட்டில் இருந்து கொட்டச்சேடு வழியாக குப்பனூர் செல்லும் ஆத்துபாலம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்கும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

திருமணிமுத்தாற்றில் வெள்ளம்

சேலம் மாநகரிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காட்டில் கனமழை பெய்து வருவதால் அங்கிருந்து கீழே வரும் மழைநீர் ஏரி, குளங்களில் நிரம்பி சேலம் திருமணிமுத்தாற்றில் கலக்கிறது. இதனால் அணைமேடு பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

மாநகரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. பின்னர் மதியம் 12.30 மணி அளவில் இருந்து லேசாக மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனிடையே மழை குறைந்ததால், திருமணிமுத்தாற்றில் ேநற்று மாலையில் தண்ணீர் வரத்து குறைந்தது.

ஏற்காட்டில் 65.2 மி.மீ. மழை

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகப்பட்சமாக ஏற்காட்டில் 65.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மற்ற இடங்களில் பதிவான மழையின் அளவு மில்லி மிட்டரில் வருமாறு:-

பெத்தநாயக்கன்பாளையம்-49.5, தம்மம்பட்டி-40, ஆணைமடுவு -37, சங்ககிரி-31, ஓமலூர்-27, மேட்டூர்-19, சேலம்-11, கரியகோவில், எடப்பாடி-10, காடையாம்பட்டி-5, ஆத்தூர், வீரகனூர்-4.

Tags:    

மேலும் செய்திகள்