தொடர் மழை எதிரொலி: முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

Update: 2022-06-25 13:44 GMT

முல்லைப்பெரியாறு அணை

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணையின் உச்ச நீர்மட்டம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.

இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகிறது. தற்போது முதல் போக பாசனத்துக்காக கடந்த 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி, தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி வீதம் என 300 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதையடுத்து நாற்றங்கால் அமைத்தல், உழவு பணிகளுக்காக கூடுதல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் கடந்த 23-ந்தேதி முதல் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடியும், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 100 கனஅடியும் என 700 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 88 கனஅடியாக இருந்தது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதைதொடர்ந்து இன்று அணையின் நீர் மட்டம் 129.40 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 88 கன அடியில் இருந்து 464 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாாில் 27 மில்லிமீட்டர் மழையும், தேக்கடியில் 18 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இந்த தொடர் மழை காரணமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்