ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2023-04-09 18:45 GMT

கோவை

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

ஈஸ்டர் பண்டிகை

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிரோடு எழுந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. ஏசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. மற்றும் பெந்தேகொஸ்தே ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சில ஆலயங்களில் நேற்று அதிகாலையிலேயே பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தபடி பங்கேற்றனர்.

சிறப்பு பிரார்த்தனை

கோவை பெரியக்கடைவீதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சிறப்பு திருப்பலியும் ஏறெடுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்களுக்கு நற்கருணையும் வழங்கப்பட்டது.

அதுபோன்று புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயம், சவுரிபாளையம் புனித சவேரியார் ஆலயம், போத்தனூர் புனித சூசையப்பர் ஆலயம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், உக்கடம் புனித செபஸ்டியார் ஆலயம், கோவைப்புதூர் குழந்தை ஏசு ஆலயம் உள்பட அனைத்து கத்தோலிக்க ஆலயங்களில் அந்தந்த ஆலய பங்குகுரு தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சி.எஸ்.ஐ. ஆலயங்கள்

கோவை-திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி அதிகாலை 4 மணிக்கு மற்றும் காலை 8 மணி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு ஆராதனை கள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆயர் ராஜேந்திரகுமார், ஆலய செயலர் ஜி.பாக்கியசெல்வன் ஆகிேயார் செய்திருந்தனர்.

இதேபோல உப்பிலிபாளையம் இம்மானுவேல் ஆலயத்தில் பிரின்ஸ் கால்வின், கணபதி வ.உ.சி. நகரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ரிச்சர்டு ஜெயக்குமார், காந்திபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் டேவிட் பர்னபாஸ், ரத்தினபுரி தூய பேதுரு ஆலயத்தில் விக்டர் பிரேம்குமார் உள்பட அனைத்து சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயங்களில் அந்தந்த சபை குரு தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

இந்த பிரார்த்தனையின்போது ஏசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிரோடு எழுந்தது குறித்து தியானிக்கப்பட்டது. பின்னர் பிரார்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவர்களுக்கு நற்கருணையும் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

இதுதவிர கோவை மாநகர், புறநகர் பகுதியில் உள்ள அனைத்து பெந்தெகொஸ்தே ஆலயங்களில் அந்தந்த சபை பாஸ்டர் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் ஏசு கிறிஸ்து ஏன் மானிடனாக பிறந்து இந்த உலகத்துக்கு வந்தார்?, அவர் சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாளில் எதற்காக உயிர்த்தெழுந்தார் என்பது குறித்து தேவசெய்தி வழங்கப்பட்டது. மேலும் சில ஆலயங்களில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பிரார்த்தனையின் முடிவில் ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்