மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீட்டுக்கு கட்டணம் பெறக்கூடாது என்பதால்சர்வர் பழுதானதாக கூறி பெண்களை அலைக்கழிக்கும் இ-சேவை மையத்தினர் :கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீட்டுக்கு கட்டணம் பெறக்கூடாது என்பதால் சர்வர் பழுதானதாக கூறி பெண்களை இ-சேவை மையத்தை சேர்ந்த சிலர் அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்ப தலைவிகள் குவிந்து வருகின்றனர்.

Update: 2023-09-29 18:45 GMT


விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள பெரும்பான்மையான பயனாளிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத்தொகை குறித்த குறுஞ்செய்தி வரப்பெறாதவர்கள் மற்றும் குறுஞ்செய்தி வரப்பெற்று வங்கிக்கணக்கில் பணம் வரவில்லை என தெரிவிப்பவர்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஆதார் பதிவு செய்துள்ள செல்போன் எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம் என்றும், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு தகுதியிருந்தும் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டிருப்பதாக கருதினால் இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்து கொள்ளலாம், இதற்காக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத குடும்ப தலைவிகள் பலர், கடந்த சில நாட்களாக உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையத்திற்கு சென்று மேல்முறையீடு செய்து வருகின்றனர். இதனால் இ-சேவை மையங்களில் குடும்ப தலைவிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மேல்முறையீடு

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு மேல்முறையீடு செய்வதற்கு பதிவு செய்ய கட்டணம் கிடையாது என்பதாலும், மற்ற ஆவணங்களை பதிவு செய்தால் கட்டணம் என்பதாலும் இதன் மூலம் போதிய வருவாய் கிடைக்கும் என்ற நோக்கத்தில் சில இ-சேவை மைய ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காக அவர்கள், மகளிர் உரிமைத்தொகை கேட்டு மேல்முறையீடு செய்ய வரும் குடும்ப தலைவிகளிடம் தற்போது இங்கு சர்வர் பழுதாகியுள்ளது, எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பம் பதிவு செய்யுமாறு கூறி அனுப்பி வைத்து வருகின்றனர். குறிப்பாக கண்டமங்கலம், வானூர், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் இருந்து விழுப்புரத்துக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

குடும்ப தலைவிகள் அவதி

ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு செய்ய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான குடும்ப தலைவிகள் வருகிற நிலையில் தற்போது அவர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்ப தலைவிகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் முன்பு மணிக்கணக்கில் காத்துக்கிடந்து வருகின்றனர்.

இவர்களுடைய மேல்முறையீட்டு விண்ணப்பத்தை பதிவு செய்வதால் பட்டா மாற்றம், சாதிச்சான்று, ஆதார் சேவை உள்ளிட்ட இதர பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட வெகுதொலைவில் இருந்து விழுப்புரம் வந்து செல்ல வேண்டுமெனில் ஒரு நபருக்கு பஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.150 வரை செலவாகிறது. உணவு செலவையும் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் வெகுதொலைவில் இருந்து வரும் குடும்ப தலைவிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு வந்து வெகுநேரம் காத்திருந்து மகளிர் உரிமைத்தொகைக்கான மேல்முறையீடு விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டிய நிலைமை உள்ளது. இதனால் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

நடவடிக்கை தேவை

எனவே மாவட்ட கலெக்டர் இதில் உடனடியாக தலையிட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களில் இருக்கும் இ-சேவை மையங்களிலேயே குடும்ப தலைவிகள், மகளிர் உரிமைத்தொகைக்கான மேல்முறையீட்டு விண்ணப்பத்தை பதிவு செய்வதை உறுதி செய்ய மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு கூடுதல் இ- சேவை மையங்களை ஏற்படுத்தவும் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே குடும்ப தலைவிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்