விழுப்புரம் எம்.எல்.ஏ.அலுவலகத்தில் இ-சேவை மையம்
விழுப்புரம் எம்.எல்.ஏ.அலுவலகத்தில் இ-சேவை மையம் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
விழுப்புரம்
விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் அலுவலகத்தில் புதிய இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பழனி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு இ-சேவை மையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறும்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த இ-சேவை மையத்தில் பொது மக்களுக்கு 32 வகையான சேவைகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது முதற்கட்டமாக வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ் என 23 வகையான சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு சேவைக்கும் ரூ.50 பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுவதால் இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து சிந்தாமணி பகுதியை சேர்ந்த அமுதா என்பவருக்கு இருப்பிட சான்றிதழுக்கான ஒப்புகை சீட்டை அமைச்சர் பொன்முடி வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், நகர மன்ற முன்னாள் தலைவர் ஜனகராஜ், விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை, தமிழ்ச்செல்விபிரபு, கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் மணவாளன், நவநீதம் மணிகண்டன், புருஷோத்தமன், சாந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.