7-ந்தேதி முதல் நீலகிரிக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் - கலெக்டர் அறிவிப்பு
அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி,
கொரோனா காலகட்டத்தில் பின்பற்றப்பட்டது போல கோடை காலத்திலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் வரும் மே 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
இ-பாஸ் வழங்கும் முன்பாக எந்த மாதிரியான வாகனங்களில் எத்தனை பேர் வருகை தருகின்றனர்? அவர்கள் எத்தனை நாட்கள் தங்கப்போகின்றனர்? எங்கு தங்கவுள்ளனர்? போன்ற விவரங்களையும் பெற்றுக்கொண்டு, சுற்றுலா தலங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகளை நீலகிரி கலெக்டர் அருணா வெளியிட்டுள்ளார். அதன்படி, வருகிற 7-ந்தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளி நபர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ் பதிவு செய்வதற்கான இணையதளம் நாளை மாலை தொடங்கும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் போதுமானது. அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை. இந்த நடைமுறை மே 7 முதல் 30-ந்தேதி வரை சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.
வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்தும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தும் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.