குப்பை கொட்டும் இடமாக மாறிவரும் ஊருணி
உப்பூர் விநாயகர் கோவில் அருகே உள்ள ஊருணியை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ஆர்.எஸ்.மங்கலம்,
உப்பூர் விநாயகர் கோவில் அருகே உள்ள ஊருணியை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊருணி
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைந்துள்ளது வெயிலுகந்த விநாயகர் கோவில். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டின்கீழ் இந்த கோவில் உள்ளது. ராமர் பூஜை செய்து வழிபாடு செய்த கோவில் ஆகும்.
இந்த நிலையில் உப்பூர் விநாயகர் கோவிலோடு சேர்ந்த கோவில் அருகிலேயே 2 ஊருணிகள் அமைந்துள்ளன. அதில் ஒரு ஊருணி தண்ணீரை மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். மற்றொரு ஊருணியில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கை, கால்களை கழுவி சுத்தம் செய்வதற்கும் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் குளிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் இடையே இந்த கோவிலுக்கு சொந்தமான மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஊருணியை சுற்றி ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதோடு குப்பை கூளங்களாகவே மிகவும் அசுத்தமாகவும் அலங்கோலமாக காட்சியளித்து வருகிறது.
கோரிக்கை
இதனால் விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த ஊருணியில் இறங்கி கை, கால்களை கழுவி சுத்தம் செய்ய முடியாமல் மிகுந்த வேதனையுடன் திரும்பி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை நிர்வாக அதிகாரிகள் உடனடியாக உப்பூர் விநாயகர் கோவில் அருகே உள்ள ஊருணியை சுத்தம் செய்து இந்த ஊருணியில் அசுத்தப்படுத்தக் கூடாது என பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவிலுக்கு வரும் பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.