வாரவிடுமுறையையொட்டிபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்:5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். 5 மணி நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-12 18:45 GMT

பழனி கோவில்

அறுபடைவீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு திருவிழாக்கள் மட்டுமின்றி வாரவிடுமுறை, முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 4-ந்தேதி நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் தைப்பூச திருவிழா முடிவடைந்த பின்னரும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்து பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பழனி பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

5 மணி நேரம்

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலை தவிர்க்க பிரதான பாதையான படிப்பாதை வழியே சீரான முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுப்பப்பட்டனர். அதேபோல் தரிசனம் முடித்த பின்னரும் சீரான அளவில் கீழே இறக்கப்பட்டனர். படிப்பாதையை தவிர்த்து அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் இதர வழிகளான ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்திலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

அதேபோல் கோவிலில் பொது, கட்டண வழி என அனைத்து தரிசன வழிகள், அன்னதானக்கூடம் செல்லும் இடம் உள்ளிட்ட இடங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. அந்த வகையில் நேற்று சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பழனியில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் நிலவியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்