திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய்- சேய் மரணம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய்-சேய் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-06-17 22:35 IST

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய்-சேய் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமணம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் மாதவன். தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலை அருகில் உள்ள சாவல்பூண்டி கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் இரண்டாவதாக கர்ப்பமான ராஜலட்சுமி பிரசவத்திற்காக நேற்று முன்தினம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் ராஜலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்தில் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இறந்த குழந்தையை மாதவனிடம் ஒப்படைத்தனர். மேலும் ராஜலட்சுமிக்கு ரத்தம் தேவைப்படுகிறது என மாதவனிடம் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இறப்பு

அதன் பின்னர் அவரது உறவினர்கள் 4 பேர் ராஜலட்சுமிக்கு ரத்தம் அளித்தனர். இந்த நிலையில் மாலையில் ராஜலட்சுமி இறந்து விட்டதாக மாதவனிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து ராஜலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டு முன்பு ராஜலட்சுமியின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து அவர்களிடம் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்க வேண்டும் என்றும், சம்பவம் குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் மூலம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் ராஜலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தினால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்