கொந்தளிப்பால் பழவேற்காடு ஏரியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் கடல் நீர் சூழ்ந்தது

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடல் கொந்தளிப்பால் ஏரி நிரம்பியது. கடல் நீர் சூழ்ந்த கிராமங்களை நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2022-12-10 08:31 GMT

தமிழகத்தில் 'மாண்டஸ்' புயல் தாக்கம் காரணமாக வங்க கடலில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. இதன் காரணமாக பழவேற்காடு கடல் சீற்றத்தால் கொந்தளிக்கிறது. தாழ்வான கடற்கரை பகுதியான கோரைக்குப்பம் கடல் பகுதியானது பழவேற்காடு ஏரிக்கும் அருகாமையில் உள்ளது. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடல் கொந்தளிப்பால் கடல் நீர் கோரைக்குப்பம் பகுதியின் வழியாக புகுந்து பழவேற்காடு ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த கிராமத்தின் வழியாக லைட்ஹவுஸ்குப்பம்-காட்டுப்பள்ளி நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் மீது 2 அடி உயரத்திற்கு கடல் நீர் செல்கிறது. இதனால் தெற்கு புறமாகவும் கடலில் நீர் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புயல் பாதிப்பாலும் காற்று தொடர்ந்து வீசுவதாலும் சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் பொன்னேரி, சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன், தாசில்தார் செல்வகுமார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு குழுவினர் கோரைக்குப்பம் மீனவ கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்களை பாதுகாப்பு இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில் அப்பகுதி மக்கள் வெளியேற மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் லைட்அவுஸ்குப்பம் ஊராட்சியில் அடங்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்தனர்.

அருகே உள்ள வைரவன்குப்பத்தில் அமைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்திற்கு செல்ல அறிவுரை வழங்கினர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் செல்வழகிஎர்ணாவூரான் ஆகியோர் அதிகாரிகளிடம் பாதிப்புகள் குறித்தும் பாதுகாப்பு மையங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

பின்னர், கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் வைரவன்குப்பம் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் பொதுமக்கள் தங்குவதற்கு போதுமான இட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். பின்னர் கடப்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய ஆண்டார்மடம் கிராமத்தில் உள்ள பன்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியின் மையப்பகுதியில் பழவேற்காடு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் அடங்கிய எடமணிகுப்பம், எடமணி ஆதிதிராவிடர் காலனி, பசியாவரம் ரஹமத்நகர், சாத்தாங்குப்பம் ஆகிய 5 மீனவ கிராமங்கள் உள்ளன. மாண்டஸ் புயலால் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் வங்கக்கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் 10 அடி உயரத்திற்கு தோன்றின. இந்த கடல்நீர் கடற்கரை கடந்து பழவேற்காடு ஏரியில் நுழைந்ததால் ஏரி முழுவதும் நிரம்பி உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 5 மீனவ கிராமங்களை சுற்றி கடல்நீர் சூழ்ந்துள்ளது. இந்த கிராம மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் வீட்டில் கடந்த 2 நாட்களாக முடங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகள் குடிநீருக்காக அதிகாரிகள் உதவிக்காக காத்து கிடக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்