புரட்டாசி மாதம் தொடங்கியதால் காசிமேட்டில் மீன் விற்பனை மந்தம்

புரட்டாசி மாதம் தொடங்கியதால் காசிமேட்டில் மீன் விற்பனை மந்தமாக காணப்பட்டது. மீன்களின் விலையும் குறைந்து இருந்தது.;

Update:2022-09-19 10:06 IST

புரட்டாசி மாதம்

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நேற்று தொடங்கியது. இந்த மாதம் முழுவதும் இந்துக்கள் பெரும்பாலோனோர் அசைவ உணவை தவிர்த்து விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதையடுத்து நேற்று மீன், இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் குறைவாக காணப்பட்டது. விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

விற்பனை மந்தம்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் மீன் வாங்க திருவிழா போல் கூட்டம் காணப்படும். ஆனால் நேற்று வழக்கமான கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மீன் விற்பனை மந்தமாகவே இருந்தது. வாடிக்கையாளர்கள் வருகைக்காக மீன்களுடன் வியாபாரிகள் காத்திருந்தனர்.

இதனால் மீன் விலையும் குறைந்து இருந்தது. சிறிய வகை மீன்களான சங்கரா, நெத்திலி, கிழங்கா போன்ற மீன் வகைகள் அதிகமாக காண முடிந்தது. மீன்விலை குறைந்து இருந்தாலும் எதிர்பார்த்த விற்பனை நடைபெறவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

விலை குறைவு

மீன் பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடக்கூடிய வஞ்சிரம் மீன் கடந்த வாரம் ரூ.1,200 வரை விற்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ரூ.900-க்கு விற்பனை ஆனது. இதே போல் ரூ.800-க்கு விற்கப்பட்ட வவ்வால் மீன் ரூ.650-க்கு விற்கப்பட்டது.

புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று மீன்கள் விலை குறைவாக காணப்பட்டது. வரும் நாட்களில் மீன்களின் விலை மேலும் பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காசிமேட்டில் மீன் விலை (அடைப்புக்குள் கடந்த வாரம் விலை) விபரம் வருமாறு:-

வஞ்சிரம் - ரூ.900 (ரூ.1200)

வவ்வால் - ரூ.650 (ரூ.800)

கொடுவா - ரூ.500 (ரூ.600)

பாறை - ரூ.400 (ரூ.500)

சங்கரா - ரூ.300 (ரூ.450)

கிழங்கா - ரூ.350 (ரூ.450)

நெத்திலி - ரூ.150 (ரூ.200)

கடம்பா - ரூ.300 (ரூ.400)

இறால் - ரூ.300 (ரூ.350)

நண்டு - ரூ.300 (ரூ.350).

Tags:    

மேலும் செய்திகள்