அதிகாரிகள், கவுன்சிலர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் ஊட்டி நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு

ஊட்டி நகராட்சியில் அதிகாரிகளுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.;

Update:2022-08-25 19:03 IST

ஊட்டி

ஊட்டி நகராட்சியில் அதிகாரிகளுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நகராட்சி கூட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மாதாந்திர கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையாளர் காந்திராஜன், என்ஜினியர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதுமே கவுன்சிலர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் கூட்டத்திற்கு வந்து விட்டார்கள், ஆனால் நகராட்சி அதிகாரிகள் பெரும்பாலானவர்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்று கவுன்சிலர்கள் ஆணையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் கூறியதாவது:-

ஜார்ஜ்:- கவுன்சிலர்கள் பெயரை பயன்படுத்தி நகராட்சி அதிகாரிகள் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணம் வசூல் செய்கின்றனர். இதனால் கவுன்சிலர்களுக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நகராட்சி பணிகளில் தரம் இல்லை.

வனிதா: பெண் கவுன்சிலர்கள் வளர்ச்சிப் பணிகள் சம்பந்தமாக பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட விஷயங்களை நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் எங்களுக்கு உடனடியாக கிடைப்பதில்லை. பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

முஸ்தபா: ஏ.டி.சி சுதந்திர திடல் என்று தவறாக இருப்பதை மகாத்மா காந்தி சுதந்திர திடல் என்று சரியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

வீடுகளுக்குள் புகும் தண்ணீர்

ரஜினி:- அலங்கார் தியேட்டர் பகுதியில் மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படாமல் இருப்பதால் தண்ணீர் வீடுகளுக்குள் செல்கிறது.

தம்பி இஸ்மாயில்: ஹவுசிங் யூனிட் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது.

அபுதாகீர்: நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. 15 வாட்ஸ் பல்புகள் உபயோகித்தால் அதன் பயன்பாடு நன்றாக உள்ளது. எனவே 20 வாட்ஸ் பல்புகளை உபயோகிக்க கூடாது. அரசு உயர் அதிகாரிகள் திடீர் ஆய்வுக்கு வரும்போது கவுன்சிலர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ரவி: எல்கில் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக வீடுகளுக்குள் மண் புகுந்துள்ளது.

கீதா: பெண் சுகாதார ஆய்வாளருக்கு அதிக பணி சுமை இருப்பதால் அவரால் சரியாக இயங்க முடியவில்லை. எனவே அவருடைய பணிச்சுமையை குறைக்க வேண்டும்.

மேரி புளோரினா மார்ட்டின்: டெண்டர் விடுவது குறித்து கவுன்சிலர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. ஆனால் நகராட்சி கையேட்டில் எந்த டெண்டரும் வருவதில்லை.

ஆணையாளர்: இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும். மேலும் டெண்டர் ஏற்கனவே விடப்பட்ட பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காரசார வாக்குவாதம்

முன்னதாக கவுன்சிலர்கள் தங்களது தேவை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் கண்டு கொள்வதில்லை. மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்களை அவர்கள் அவமானப்படுத்துகின்றனர் என்று கவுன்சிலர்கள் ஆணையாளரிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மொத்தத்தில் கவுன்சிலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் நகராட்சி வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்