கருவாடு காய வைக்கும் பணி தீவிரம்
சேதுபாவாசத்திரம் பகுதியில் சுட்டொிக்கும் வெயில் காரணமாக கருவாடு காய வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கருவாடுகள் நாமக்கல்லுக்கு கோழி தீவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.;
சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரம் பகுதியில் சுட்டொிக்கும் வெயில் காரணமாக கருவாடு காய வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கருவாடுகள் நாமக்கல்லுக்கு கோழி தீவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மீன்பிடி தொழில்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம் பகுதிகளில் கடந்த 15 நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மீனவர்கள் கருவாடு காய வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு தொடங்கி மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உள்பட 34 மீனவ கிராமங்களில் சுமார் 4500 நாட்டுப்படகுகளும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகளும் மீன்பிடிதொழில் செய்து வருகிறது.
கோழி தீவனம்
இந்த படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை உடனடியாக விற்பனை செய்தும் வெளியூர்களுக்கு அனுப்பியும் வைக்கிறார்கள். அதேசமயம் இதில் கழிவாக கூடிய மீன்களையும் சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி துறைமுகங்களிலேயே காயவைத்து கருவாடு விற்பனை தொழிலும் செய்துவருகின்றனர்.உணவுக்கு பயன்படும் கருவாடுகளைவிட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சிறியவகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இவ்வகை மீன்களை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ 20 ரூபாய் முதல் 22 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழி தீவனத்துக்கு அனுப்பப்படுகிறது.
கருவாடு உற்பத்தி
மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம்பிரிக்க, காயவைக்க, சாக்குமூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த நான்கு மாதங்களாக இந்த பகுதிகளில் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வந்ததால் வெயில் இன்றி கருவாடு உற்பத்தி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது.இதனால் தினந்தோறும் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வந்தனர்.சேதுபாவாசத்திரம் பகுதியில் கடந்த 15 நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் மீனவர்கள் தங்குதடையின்றி கருவாடு காயவைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது ஒரு கிலோ காளை கருவாடு ரூ.300 முதல் ரூ.350-க்கும், கொடுவாய் கருவாடு ரூ.550 முதல் ரூ.600-க்கும், பன்னா கருவாடு ரூ.250-க்கும், சுறா ரூ.150-க்கும், தட்டைகாரல் ரூ.60-க்கும் விற்கப்படுகிறது.இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற கடலோர பகுதிகள் மீன்பிடி தொழிலை நம்பியே உள்ளன. குறிப்பாக கருவாடு தொழில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தொழிலை நம்பி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். மழைக்காலங்களில் கருவாடு உற்பத்தி தொழில் மிகவும் பாதிப்படைகிறது. இதனால் இதை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே தொழிலாளர்களை காக்கும் வகையில் அரசு உலர்களம் மற்றும் இருப்பு வைப்பதற்கு கிடங்கு அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.