செவிலியர்களிடம் குடிபோதையில் வாலிபர்கள் ரகளை
திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்களிடம் குடிபோதையில் வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள்.
திட்டக்குடி
குடிபோதையில் ரகளை
திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சிலர் உள் நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு இரவு நேரம் ஒரு டாக்டர் மற்றும் 2 செவிலியர்கள் பணியில் இருந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் அவர்கள் பணியில் இருந்தபோது இரவு சுமார் 10 மணியளவில் அங்கே சுமார் 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்தனர். பின்னர் குடிபோதையில் இருந்த அவர்கள் திடீரென அங்கிருந்த செவிலியர்களிடம் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டனர்.
கைது செய்ய வேண்டும்
இது குறித்து செவிலியர்கள் தலைமை மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். ஆனால் அதற்குள் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் இது குறித்து அவர் கூறுகையில் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இரவு நேரம் ஒரு மருத்துவர் மற்றும் 2 செவிலியர்கள் மட்டும் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு இரவு நேரம் சிலர் குடிபோதையில் வந்து அடிக்கடி ரகளையில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இரவு காவலரை நியமித்து செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், ரகளையில் ஈடுபட்ட வாலிபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார்.
போலீஸ் வலைவீச்சு
பின்னர் இது குறித்து தலைமை மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரவு நேரம் குடிபோதையில் வாலிபர்கள் செவிலியர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் திட்டக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.