திருவள்ளூரில் திரையரங்கில் குடிபோதையில் ரகளை; ஊழியர்கள் மீது தாக்குதல் - 12 பேர் மீது வழக்கு

திருவள்ளூரில் உள்ள திரையரங்கில் குடிபோதையில் வந்ததால் டிக்கெட் தர மறுப்பு தெரிவித்த ஊழியர்களை தாக்கிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-06-12 07:02 GMT

திருவள்ளூர் தேரடி பகுதியில் திரையரங்கம் ஒன்று உள்ளது. இந்த திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று மதியம் ஒரு சிலர் மது அருந்திவிட்டு வந்து டிக்கெட் கேட்டுள்ளனர். அவர்கள் மது போதையில் தள்ளாடிக் கொண்டு வந்ததால் டிக்கெட் கொடுக்க முடியாது என தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் வள்ளுவர்புரம் பகுதியைச் சேர்ந்த 12 பேர் கொண்ட கும்பலுடன் திரையரங்கில் புகுந்து அங்கு பணிபுரியும் நபர்களை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மீண்டும் இரவு 8 மணியளவில் திரையரங்குக்கு வந்த அதே கும்பல் திரையரங்கில் பணி புரியும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க வந்ததால் சினிமா பார்க்க வந்தவர்கள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும் அவர்கள் திரையரங்குக்குள் புகுந்து திரையரங்கை அடித்து நொறுக்கியுள்ளனர். அதை தடுக்க வந்த ஊழியர்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஊழியர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து திரையரங்கு மேலாளர் திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பி.சி.கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரதாசன் மேற்பார்வையில், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப்பதிவு செய்து திரையரங்கை அடித்து நொறுக்கி, ஊழியர்களை தாக்கி 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்