ஓடும் ரெயிலில் குடி போதையில் ரகளை: 2 பேரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை
பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமிகள் 2 பேரை பிடித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருப்பூர்,
ஓடும் ரெயிலில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமிகள் 2 பேரை பிடித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் கோவையில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து ஆலப்புழா செல்லும் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு ஏறி குடும்பத்துடன் எஸ்.9 முன் பதிவு பெட்டியில் பயணம் செய்தார். அதிகாலை 3 மணி அளவில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு அந்த ரெயில் வந்தடைந்தது.
அப்போது வாலிபர்கள் 4 பேர் எஸ்.9 பெட்டியில் ஏறி சத்தம் போட்டு, புகை பிடித்தபடி வந்தனர். அவர்கள் திடீர் ரகளையில் ஈடுபட்டதால் அந்தப் பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. அந்த வாலிபர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெட்டியில் பயணம் செய்த மணிகண்டன் தட்டி கேட்டார். அப்போது அந்த இளைஞர்களுக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த 4 வாலிபர்களும் சேர்ந்து மணிகண்டனை தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டி கேட்ட மணிகண்டனின் சகோதரிக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 3.45 மணிக்கு ரெயில் திருப்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அந்த 4 வாலிபர்களும் ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர். ஓடும் ரெயிலில் பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மணிகண்டன் திருப்பூர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த 2 வாலிபர்களை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.